| | | | |


c.s.krishnaswami

திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். அவர்கள் தென்னாற்காடு மாவட்டம் கடலூர் பழையபட்டினத்தில் திரு.கிருஷ்ணசாமி - மீனாட்சியம்மை ஆகியோர்களுக்கு 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம்தேதி மூன்றாவது மகனாக பிறந்தார். அவர் 11 மாத குழந்தையாக இருந்தபோது தாய் இறந்துவிட்டார். சிற்றன்னை திருமதி பட்டம்மாள்  அவர்களால்  வளர்க்கப்பட்டார்.  இவருடைய  மூத்த   சகோதரர்கள்  திரு. கி.கோவிந்தராசன், திரு. கி. தண்டபாணி ஆவார்கள். கி.வீரமணிக்கு பெற்றோர் வைத்தபெயர்சாரங்கபாணி என்பதாகும். கி.வீரமணியை அவர்களுடைய ஆசிரியர் ஆ.திராவிடமணிதான் சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி கி.வீரமணி என்று அழைத்தார்.
thirumathi. meenakshi ammal
             கி.வீரமணியின் படிப்பு திண்ணைப் பள்ளிக்கூடம் ஹரிநமோத்துசிந்தம் அட்டை வகுப்பு (L.K.G, U.K.G எல்லாம் கிடையாது). கி.வீரமணி வசித்த அதே தெருவில் அவருடைய தோழர் இன்றைய பிரபல எழுத்தாளர் இலக்கியவாதி ஜெயகாந்தனின்அத்தை சொர்ணத்தம்மாள்  நடத்திய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார்.பிறகு சோனகர் தெருவில் இருந்த இஸ்லாமிய அறக்கட்டளையினர் நடத்திய நடுநிலை(எட்டாம் வகுப்பு வரை உள்ள)ப் பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு வரை படித்தார். அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆ. திராவிடமணி ஆவார்.    பிறகு கிறித்துவப்பள்ளி S.P.G என்ற பள்ளியில் (இப்போது அதன்பெயர் St.David's Higher Secondary School ) முதல் பாரம் ( First Form)  ஆறாம் வகுப்பில் ஆசிரியர் ஆ, திராவிடமணி அவர்களால் சேர்க்கப்பட்டு படிப்பைத் தொடர்ந்தார்.   சனி, ஞாயிறுகளில் வெளியூருக்கு கூட்டங்களுக்கு கி.வீரமணியின் ஆசிரியர் ஆ.திராவிடமணியோ, அல்லது கி.வீரமணியின் மூத்த அண்ணன் கி. கோவிந்தராசனோ அழைத்துச் செல்லுவார்கள்.

dravidamani
தொடக்கப்பள்ளியில் கி.வீரமணி இரண்டாவது வகுப்பில் படித்தபோது, ராஜாவாக பள்ளி நாடகத்தில் நடித்தபோது மிடுக்குடன் பேசியதைக் கேட்ட அதன் (Higher Elementary School) தலைமை ஆசிரியராக இருந்த (ஆசானபுதூர் சுப்ரமணியம்) ஆ. திராவிடமணி என பெயர் மாற்றிக் கொண்டார். அவர் தான் கி.வீரமணியை ஊக்கப்படுத்திப் பேசும் பயற்சி அளித்தார். எழுதிக் கொடுப்பார். மனப்பாடம் செய்து மேசையில் தூக்கிவிட்டவுடன் பேசத் தொடங்குவார். அப்படி அவர் பல மாணவர்களுக்கு பிரைவேட் டியூசன்  சொல்லிக் கொடுத்த வாய்ப்பில் (கடலூர் முதுநகரில்)  கி.வீரமணியையும் படிப்படியாக இயக்கத்தில் சேரும்படி வைத்து அப்போதே விடுதலை , குடிஅரசு , திராவிடநாடு ஏடுகளை உரக்கப்படிக்கும்படி ஆணையிட்டு, பொருள் விளக்குவார். பல ஊர்களுக்கும் (அவரது செலவிலேயே) அழைத்துச் சென்றார். அதனால் இயக்க ஈடுபாடுவளர்ந்தது. கடலூரில் பல கூட்டங்களை ஏற்பாடு செய்து உள்ளூர் எதிர்ப்பையும் கண்டு பயப்படாமல் பழகிய நல்வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.      கி.வீரமணி எட்டாவது படிக்கும்போது ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி (திரு முருகேச முதலியார்)வந்திருந்தார். அவர் வகுப்புகளுக்குச் சுற்றி வந்தார்.  கி.வீரமணியின் தமிழ் ஆசிரியர் புலவர் பழனியாண்டி (முதலியார்) அவர்களின் வகுப்புக்குள் நுழைந்தார். மாணவர்களைப் பார்த்து உங்களில் 10 திருக்குறள் தெரிந்தவர்கள் உண்டா? தெரிந்தால் சொல்லுங்கள் என்றார் (அப்போது குறள் பாடத்திட்டத்தில் அதிகமாக வைக்கப்படாதது) கி.வீரமணி எழுந்து திராவிடர் கழக பொதுக்கூட்டங்கள், அய்யா, அண்ணா உரைகள் விடுதலை, குடிஅரசு,  திராவிடநாடு இதழ்களில் படித்து நினைவில் நின்றிருந்த 10 குறள்களைக் கூறினார். மிகவும் மகிழ்ந்து பாராட்டிச் சென்ற அவர் கி.வீரமணிக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் ஒன்றையும் தந்தார். பள்ளி இறுதித் தேர்வு வரை சம்பளம் கட்டத் தேவையில்லாமல் மாதம் ஒரு ரூபாய் மிச்சமாகும் அளவுக்கு அத்தொகை கி.வீரமணிக்கு உதவவும் செய்தது!    இண்டர்மீடியட் பொதுத்தேர்வு இரண்டாவது ஆண்டு(Public Examination )  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பொருளாதாரப் பாடம் கி.வீரமணியின் விருப்பப்பாடம், அதில் கி.வீரமணி பல்கலைக்கழகத்தில்  படித்த அந்தப் பிரிவின் மாணவர்கள் 200 பேர்களில் பல்கலைக் கழகத்தில் முதல் மதிப்பெண் (அதிக மதிப்பெண் பெற்று) அதற்கென ஆண்டுதோறும் வழங்கப்படும், லேடி ஸ்ட்ரெத்தே  பொருளாதாரப் பரிசினைப்  பெற்றார்.     முதல் மாணவனாக இண்டர்மீடியட்டில் வந்ததால் எந்தவிதப் பரிந்துரையும் இன்றி பொருளாதார ஹானர்ஸ் (எம்.ஏ,) வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு எளிதில் தானே கிடைத்தது! பி.ஏ., ஹானர்ஸ்  வகுப்பில் பல்கலைக் கழக முதல் தகுதி ( First Rank) வாங்கி, அதற்கென வழங்கப்படும் ஸ்ரீநடராஜா தங்கப்பதக்கம், கி.வீரமணிக்கு அந்த ஆண்டு கிடைத்தது! அந்த வகுப்பில் மொத்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெறுபவர்களுக்கெனத் தரப்படும் பரிசும் கி.வீரமணிக்கே கிடைத்தது!    ஹானர்ஸ் வகுப்பில் தனிப்பாடம் விருப்பப்பாடம் (விவசாயப் பொருளாதாரம் (Agricultural Economics) அதில் தேர்வு எழுதியவர்களில் அதிகமான மதிப்பெண் பெறுபவருக்கு ஒரு தனிப்பரிசு  ஆக மொத்தம் மூன்று பரிசுகள் பொருளாதார எம்.ஏ., யில் உண்டு.  அதில் முதல் ரேங்க், அதிக மதிப்பெண், பரிசு  இவை வாங்கியவர் விருப்பப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறாவிட்டால், அப்பரிசு வேறு யார் வாங்கினாரோ அவருக்கே செல்லும்.      கி.வீரமணியைப் பொறுத்தவரை இந்த மூன்று பரிசுகளையும் ஒருவரே பெற்றது  முன்னும் பின்னும் இல்லாத ஒன்றாக அமைந்துவிட்டது! பல்கலைக் கழகவெள்ளிவிழா பேச்சுப் போட்டி, நிறுவனர் நாள் பேச்சுப்போட்டி என்று பல பரிசுகளும், பதக்கங்களும் கி.வீரமணிக்குக் கிடைத்து கி.வீரமணியை ஊக்கப்படுத்தின.உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயதில், எனது பள்ளியிலேயே தந்தை பெரியார் அவர்களை அழைத்து கழக நிகழ்ச்சிக்கு இடம் தந்து நடத்திய இயக்க நிகழ்ச்சியில் நான் பேசியது கடலூர் (உள்ளூர்)  பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது எனது உரையைப் பொதுக் கூட்டத்தில் நின்று என் ஆசிரியர்களே கேட்டு சுவைத்தும், திகைத்தும் நின்றதைக் கண்ட காட்சி இவை என்னால் மறக்கப்பட முடியாதவை. அதில் சில பார்ப்பன ஆசிரியர்களும் உண்டு! என கி.வீரமணி தனது அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூலில் குறிப்பிடுகிறார். கி.வீரமணி கடலூரில்  மாணவப்பருவத்தில் புதுமை, முழக்கம் என்ற இரண்டு கையெழுத்து ஏடுகளை நடத்தி, அய்யா, அண்ணா, புரட்சிக் கவிஞர், கலைஞர் ஆகியோர்களது கருத்துரைகள் வாழ்த்துகளைப் பெற்றார்.

பெரியார் முன்னிலையில் முதல் முழக்கம்
anna
1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி..... கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில்  தென்னார்க்காடு மாவட்டத்திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இளவயதிலேயே கி.வீரமணியைப்  பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த அவருடைய ஆசிரியர் திரு. ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது. மாநாட்டிற்குவிருதுநகர் திரு. வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர்.மாநாட்டுத் திறப்பாளர் அய்யா பெரியார் திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய, ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் கி.வீரமணியின் உறக்கத்தினை ஓடோடச் செய்தது. பொழுது விடிந்ததும்திரு.ஏ.பி.ஜனார்த்தனம்.எம்,ஏ.,அவர்கள்அய்யாவைப்பார்க்ககி.வீரமணியை அழைத்துப்போனார்.
அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினார்கள். கி.வீரமணிக்கு ஆசை ஒரு பக்கம். அவரை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம். அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார். தோழர் ஏ.பி.ஜே. கி.வீரமணி அய்யாவைப்பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டார். மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். இம்மாநாட்டில் கி.வீரமணி உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்றும் அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!அடுத்து பேசிய அண்ணா அவர்கள் கி. வீரமணியின் பேச்சை வைத்தே துவக்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால   ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப்பிட்டார்கள்.


திராவிடர்கழகமாக மாறிய மாநாட்டில்
veeramani
1944 ஆகஸ்ட்26, 27 ஆம் நாள்களில் நீதிக்கட்சியின் 16-வது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. பழைமை வாதிகள் சிலர் திட்டமிட்டுப் பெரியாரின் தலைமைப்பதவியைப் பறித்திடக் கனவு கண்டனர். சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட்டில் தென்னிந்தியர் நல உரிமைச்சங்கம் என்ற பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரைக்கும்  முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில்  கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது, சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாதுரை தீர்மானந்தான். பெரியார் விருப்பத்திற்கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறைவேற்றினார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட கவுரவப் பட்டங்களான சர், திவான்பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்சாகிப் போன்றவைகளைக்  கட்சியில் உள்ளோர் விட்டு விடவேண்டும் . அதேபோலக் கவுரவநீதிபதி, ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு  நியமனங்கள், நாமினேஷன்  மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப் பதவிகளையும் விட்டொழிக்க வேண்டும்  என்று தீர்மானம் நிறைவேறியதன் வாயிலாக சரிகைக் குல்லாய்க் கட் சி என்ற அவப்பெயர் ஒழிந்தது. இங்கு ஒரு  தீர்மானத்தின் மீது பேசினார் கடலூர் சிறுவன் கி. வீரமணி.  பத்துவயதுச் சிறுவன் கி.வீரமணி 1944 சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழிமொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டார். வரலாறு படிப்போராக இல்லாமல் திராவிடஇயக்க வரலாறு படைப்போராக கி. வீரமணி மாறினார்.  | | | | |