| | | | |
   
நாத்திகம் என்பதன் உண்மை தன்மை அறியாத பலர் நாத்திக கொள்கை என்பது கருஞ்சட்டைக்காரர்களின் கடவுள் மறுப்பு கொள்கை மட்டும்தான் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அறிவியல் ஒரு பொருளின் உண்மைத்தன்மையை அறிவுறுத்துகிறது. நாத்திகம் என்பதும் உண்மையை அறிய அறிவுறுத்துகிறது. ஆகவே அறிவியலும், நாத்திகமும் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன.ஆனால் அறிவியல் உண்மைத்தன்மையை விளக்குகிறது. நாத்திகம் உண்மைத்தன்மையை விளக்குவதுடன்  மனிதனை மனிதனாக்குகிறது.          ஆசியா கண்டத்திலேயே நாத்திகம் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது தந்தை பெரியார் என்ற மாமனிதனின் பெயராகும். தந்தை பெரியார் ஒரு தனிமனித இராணுவம் போல செயல்பட்டு வெற்றி கண்டதன் விளைவாக அவர் தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படுகிறார்.தந்தை பெரியார் பகுத்தறிவை நேசிக்கும் ஒரு நாத்திக தந்தை. அவர் சமுதாயத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளை வேரோடும், வேரடிமண்ணோடும், பெயர்த்தெறிந்த கடப்பாரை! அனைவராலும் போற்றப்பட்ட ஒரு சமுதாய சீர்திருத்தவாதி ஆவார்.

மூடநம்பிக்கை என்ற இருளில் மூழ்கிக்கிடந்த இந்த சமுதாயத்தை பத்தொன்பதாவது நூற்றாண்டில் பெரியார் பகுத்தறிவு என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி பல்வேறு தடைகற்களையும் தாண்டி தனது இடையறாத உழைப்பின் மூலம் மூடநம்பிக்கையை அழித்து ஒரு பகுத்தறிவு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இனி வருங்காலங்களில் பெரியாரியல் என்ற ஒளியை தவிர வேறொன்றும் இருக்காது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சுடரை அணையாமல் பாதுகாத்து அவருடைய கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் டாக்டர்.கி. வீரமணியின் பங்கு அளவிடற்கரியது. அதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் பகுத்தறிவாளர் ஆவார். ஆசிரியர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் டாக்டர்.கி. வீரமணி அவர்கள் தமிழ்நாட்டோடு,இந்தியாவோடு இருந்த பெரியாரின் கொள்கைகளை இன்று உலகமயமாக்கி பெரியாரியலை உலகெங்கும் பரப்பிவரும் ஓர் உன்னத மாமனிதர் ஆவார்.



  | | | | |