| | | | |
திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்து தி.மு.க உருவாக்கப்பட்ட நிலையில் ஒருமுறை அண்ணாவும் கி.வீரமணியும் சந்திக்க நேரிட்ட சம்பவம்பற்றி கி.வீரமணியே கூறுகிறார் படியுங்கள். என் மூத்த அண்ணன் தி.மு.க. நகரச் செயலாளர் திரு. கி. கோவிந்தராசன் தமிழர் தேநீர் விடுதி என்ற பெயரில் கடலூர் காவல் நிலையம் அருகே வைத்திருந்தார்.  குறிஞ்சிப்பாடி பெரிய குடும்பத்தினைச் சார்ந்தவர் தோழர் இரா.சாம்பசிவம்.அவருடைய நண்பர் உறவினர் திரு.சாமி என்பவர். அவர் மியான்மர் (பர்மா) நாட்டுத் தலைநகர் ரங்கூனிலிருந்து (தற்போதைய புதுப்பெயர் யாங்கூன்) வந்தவர். அவருக்கு அண்ணா தலைமையில் குறிஞ்சிப்பாடியில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது! எனக்கும் (திராவிடர் கழகத்தவன் நான்) நட்பு முறையில் அவரை அழைத்து வந்து தோழர் சாம்பசிவம் அழைப்பிதழ் கொடுத்துச் சென்றார். அந்தத்திருமணத்திற்குச்  செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்தேன்.

திடீரென்று என் அண்ணனின் தேநீர் விடுதிக்கு முன் ஒரு கார் வந்து நின்றது. பெரிய அண்ணனையும், என்னையும் அழைத்தது! என் அண்ணன் உடனே சென்றார் நானும் பார்த்தேன். உள்ளே அண்ணா ஆம், அறிஞர் அண்ணாதான், கூட்டங்களில் அவரை நான் விமர்சித்தும் பேசி வருவதுண்டு. நான் வணக்கம் கூறினேன். அவர் என்னை நலம் விசாரித்து எப்படி நன்றாகப் படிக்கிறாயா? என்றார். தலையாட்டினேன். குறிஞ்சிப்பாடி திருமணத்திற்குச் செல்லக் காத்திருக்கிறேன் என்பதைப் புரிந்தவர் என்னை அவரது காரிலேயே வற்புறுத்தி ஏற்றிக் கொண்டார். எனக்குக் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் அவரது காரிலேயே குறிஞ்சிப்பாடியில் அவரது தலைமையில் நடைபெற்ற திரு. சாமி அவர்களது திருமணத்திற்குச்சென்றபோது என்னையும் ஏற்றிக் கொண்டார். என்னைப் பற்றி மிகவும் அன்புடன் விசாரித்து வந்தார்! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் படிக்கிறாயா? என்று வினவினார்.

எப்போதும் உண்மைகளை மறைத்து அறியாத நான் அவரிடம் தயக்கத்துடன் சில மாதங்களுக்கு  முன்புதான் நான் படிப்பை நிறுத்திவிட்டேன் என்று கூறினேன். மிகவும் வருத்தப்பட்டார். எனது குரூப் மாற்றம் பற்றிய பிரச்சினைகள் காரணம் என்று எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்ல அவகாசம் இல்லை. குறிஞ்சிப்பாடி திருமண இல்லம் வந்தது அங்கே அத்திருமண வாழ்த்துரையாளர்கள் பட்டியலில் அண்ணாவே என்னையும் நான் எதிர்பாராமல், பேச அழைத்தார். நான் பேசினேன் சுருக்கமாக அதை அவர் சுவைத்ததையும் கூட்டத்தினர் உணர்ந்தனர். சாப்பாட்டிற்குப் பின் புறப்பட ஆயத்தமான போதும் அண்ணா நானும் காஞ்சிபுரம்தான் செல்கிறேன். கடலூரில் உன்னை இறக்கிவிட்டே செல்கிறேன் என்றார். நானும் மகிழ்ச்சியோடு ஏறிக் கொண்டேன். வழியில் சொன்னார், நீ காஞ்சிபுரம் வந்துவிடு. அங்கேயுள்ள பச்சையப்பன்கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் படிப்பைத் தொடருவதே நல்லது என்று கூறினார். நான் சொன்னேன் நான் நிச்சயம் யோசிக்கிறேன்.
கடலூரில் என்னை இறக்கி விட்டுவிட்டு அண்ணா காரில் சென்றுவிட்டார். என் தந்தையார் அவர்கள் உட்பட என் வீட்டாருக்கு அண்ணா என்னைக் காஞ்சிபுரம் வந்து படிக்கச் சொல்லி அழைத்தது கேட்டு ஆச்சரியப்பட்டு, இவன்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டான். இவன் பெரியார் கட்சி அல்லவா? இவனுக்கு அண்ணா அழைப்பை ஏற்க மனம் இடம் கொடுக்கவில்லை போலும்! என்று கூறினர். நான் அதிகம் குரூப் பற்றி விளக்கம் ஏதும் சொல்லாமல்-
ஆமாம் அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள். அதில் என்ன தவறு, அண்ணாவின் உதவி பெற்றுவிட்டு பிறகு அவருக்கு எதிராக நான் கட்சியில் பேசுவதற்கு எனது மனச்சாட்சி குறுக்கே நிற்காதா?நான் பெரியார் கட்சிக்காரன்தான். கடைசி வரை நான் இதில் பிடிவாதத்துடன் இருப்பேன். நானே தொடர்ந்து படித்துக் காட்டுகிறேனா இல்லையா பாருங்கள்! என்றெல்லாம் பேசினேன். இது வீட்டு உரையாடல்தான். இந்நிகழ்ச்சி கி.வீரமணியின், அய்யாவின்அடிச்சுவட்டில் தடம்புரளாமல் இருக்கும் பாங்கை நமக்கு விளக்குகிறதல்லவா!

பெரியாரின் நூல்களை மறுபதிப்பு செய்தல்
அய்யா அவர்கள் சிறையிலும் மற்றும் சிறைவாச கால மருத்துவமனையிலும் இருந்தபொழுது, அய்யா அவர்கள் ஆணைப்படி அன்னை மணியம்மையார் அவர்களுடன் சுற்றுப் பயண நிகழ்ச்சியில் கி.வீரமணி கலந்து கொண்டார். மற்றபடி அம்மா அவர்களுடன் கி.வீரமணியும் சென்னை வந்து அய்யாவைச் சந்தித்துக் கழகச் செயல்பாடுகளில் அய்யா அவர்களது ஆலோசனையைப் பெற்றார்கள். அய்யாவின் பல நூல்கள் குடிஅரசு பதிப்பக, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக நூல்கள் நீண்டகாலமாக அச்சிடப்படாமல் (டிரவ டிக  யீசவே) ஆக இருந்தவைகளை, கி.வீரமணி தேர்வு செய்து, அம்மாவிடம் கலந்து அய்யாவின் அனுமதி பெற்று வெளியிடவும் ஏற்பாடுகள் செய்தார்.
சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதி சில பதிப்புக்கள் மட்டுமே அப்போது வெளியாகியிருந்த தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலான தமிழர் தலைவர் நூலை நீண்ட இடைவெளிக்குப் பின் அழகிய முறையில் ஆர்ட் அட்டையில் அய்யா உருவம் தாங்கியதாகவும், திருச்சியில் நடைபெற்ற வழக்கில் அய்யா அவர்கள் தண்டிக்கப்பட்டார் அல்லவா! அத்தண்டனையில் நீதிபதி திரு. சிவசுப்ரமணிய (நாடார்) அளித்த தீர்ப்பில், அவர்களது வாதங்கள் எப்படிப்பட்ட தலைமை தந்தை பெரியாரின் தலைமை என்பதை உலகுக்குப் பறைசாற்றுவதாக அமைந்திருந்த பகுதியை எடுத்து, மொழி பெயர்த்து இணைத்து பல படங்களுடன் மறுபதிப்புச் செய்தார் கி.வீரமணி

கி.வீரமணி அவர்களின் திருமணம்
பள்ளிப்படிப்பு முதற்கொண்டே பெரியாரின் பெருந்தொண்டனாக அவரது கொள்கையினை நாடெங்கும் நல்ல முறையில் பரப்பியவர். பிரச்சாரகராக,  பெரியாரின் வாழ்க்கையை தன் வாழ்வின் இலட்சியமாக, அவரது ஆணையே தன் மூச்சாகக் கொண்ட தொண்டர் கடலூர் கி. வீரமணி எம்.ஏ., அவர்கட்கும்கோட்டையூர்தோழர்கள்சிதம்பரம் - ரங்கம்மாள்ஆகியோர் மகள் திருமதி சி. மோகனாவுக்கும் 7.12.1958 ஞாயிறு மாலை 4.30 -  6.00 மணிக்கு (வைதீகர்கள் அஞ்சும் இராகு காலப் பொழுதில்) திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற்றது. வந்த விருந்தினருக்கு வாழ்க்கை இணைநல நூல் பரிசாக வழங்கப்பட்டது.

கழகத்தினர் திரண்டனர்
இத்திருமண விழா இயக்கச் சார்பாக நடத்தப் படுவதாலும் அதுவும் பெரியாரால் அவரது இலட்சியக் கொள்கைக்கேற்ப நடத்தப்படுவதாலும் தமிழகத்திலிருந்து முக்கியஸ்தர்கள், கழகத் தலைவர்கள், செயலாளர்கள், தொண்டர்கள் கடலெனத் திரண்டு பெரியார் மாளிகை மைதானம் நிரம்பி வழியும்படிக் காட்சியளித்தனர். எங்கு நோக்கிலும் கருஞ்சட்டைமயமேதான். மணமக்களும் கருப்புடை அணிந்திருந்தனர். திருமணத்திற்கு முக்கியமாக டாக்டர் அ.சிதம்பரநாதன், எம்.எல்.சி திருமதி சிதம்பரநாதன், புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன், திருச்சி முனிசிபல் சேர்மன் டாக்டர் மதுரம் எம்.எல்.ஏ., சேலம் அழகரசன்,  வழக்கறிஞர்கள் துறையூர் ரெங்கசாமி பி.ஏ., பி.எல்., சிவகங்கை சண்முகநாதன் பி.ஏ.,பி.எல்., குடந்தை முத்து தனபால், கிருட்டிணசாமி பி.ஏ.,பி.எல்., புலவர் தமிழ்மறவர் பொன்னம்பலனார், பென்னாகரம் நஞ்சையா, இராமமூர்த்தி, சேலம் ரெத்தினசாமி, அருணாச்சலம், சிதம்பரம் கிருட்டிணசாமி, புலவர் முருகேசனார், தஞ்சை இராசகோபால், வரகூர் நடராசன், பொத்தனூர் சண்முகம், கோவை நகர செயலாளர் ரெங்கநாதன், திருவாரூர் கே. தங்கராசு, ஏ.பி. சனார்த்தனம் எம்.ஏ, ஆனைமலை நரசிம்மன் மற்றும் பலரும் வந்திருந்தனர்.திருமண மேடை பலவித வேலைப்பாடுகள் செய்து அழகுற அமைத்து நடுவில் உலக மேதை பெரியாரின் திருவுருவப் படமும் அதற்குள் கீழ் அமர்வதற்கு சோபாவும் அமைத்து ஒளி விளக்கினால் ஜோடிக்கப்பட்டு இருந்தது.
தந்தை பெரியாருடன் வடநாட்டுப் பயணம்
01.02.1959 அன்று பெரியார் கார் மூலமாகச் சுமார் 4000 மைல் நீளச் சுற்றுப் பயணம் ஓன்றுமேற்கொண்டார்.மணியம்மையார், ஆனைமலை ஏ.என்.நரசிம்மன், ராமகிருஷ்ணம்மாள், கி.வீரமணி, புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோரும் பெரியாருடன் புறப்பட்டனர். ஜம்பல்பூர், கான்பூர்,லட்சுமணபுரி, டெல்லி,சிகந்தராபாத், ஜான்சி, நாகபுரி போன்ற இடங்களுக்கு சென்று கொள்கை பிரச்சாரம் செய்தார்கள்.

திராவிடர் கழக கூட்டுப் பொதுச்செயலாளராக நியமனம்
1960 மே 15 ஆம் தேதி திருச்சியில் கூடிய மத்திய திராவிடர் கழக நிருவாகக் குழு கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆனைமலை ஏ.ஏன் நரசிம்மன் பி.ஏ., அவர்களையும் கி.வீரமணியையும்  பொதுச் செயலாளர்களாக நியமித்து அறிவித்தார்.

விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றல்
1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில் விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து கி.வீரமணியை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், கி.வீரமணியுடைய வாழ்வினையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தார்கள். அவர்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை கி.வீரமணியின் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், கி.வீரமணியின் முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, கி.வீரமணியின் வாழ்விணையர் கி.வீரமணிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். கி. வீரமணி இயக்கத்தின் முழுநேரத் தொண்டனாகத் தொடர்கிறார்.
10.8.1962 விடுதலைக்கு கி.வீரமணி ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு தந்தை பெரியார் அவர்கள் வரவேற்கிறேன் என்று விடுதலையில் வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார் கி.வீரமணியிடம் விடுதலை பொறுப்பை ஒப்படைத்தல்
06.06.1964 தந்தை பெரியார் விடுதலை யில் தலையங்கப்பகுதியில் ஒப்படைத்துவிட்டேன் என்ற தலைப்பில்  கி. வீரமணியைப் பற்றி வெளியிட்ட அறிக்கை: கி.வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும், புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.,பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ. 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்று வரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல்  பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக்கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார்.

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால் விடுதலையை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் விடுதலை பத்திரிகைக் காரியாலயத்தையும், அச்சு இயந்திரங்களையும் மாதம் 1-க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்குக் கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும், அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார். ஆகவே விடுதலையின் 25-வது ஆண்டுத் துவக்கத்தில் லட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு நஷ்டமடைந்து நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும், கருதி விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதுஎன்று குறிப்பிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.

1972ல் வானொலியில் கி.வீரமணி
சென்னை வானொலி நிலையத்தில் ஏப்ரல் 1972இல் சமயக் கல்வி தேவையா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. கி.வீரமணியுடன் விவாதத்தில முன்னாள் மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, எழுத்தாளர் பி.எல்.ராமையா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மேயர் ராதா கிருஷ்ணப் பிள்ளை, எழுத்தாளர் பி.எல். ராமையா ஆகியோர் கேள்விகளுக்குகி.வீரமணி அளித்த பதில்களும், அன்றைக்கே வானொலி நிலையத்தின் அனுமதி பெற்று விடுதலை (9.4.1972 மற்றும் 16.04.1972) யில் வெளியிடப்பட்டன.

கி.வீரமணிக்கு பெரியார் அணிவித்த மோதிரம்
19-8-73 தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலப் பெருநாள் திருநாள்! ஆம் அது என்ன விழா? தந்தை பெரியாருக்கு பிரச்சார பயணம் மேற்கொள்ள வேன் வழங்கும் விழா. பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச் சிறப்புப் புகழ் வாய்ந்த முத்துப் பல்லக்கில் பெரியாரும்,கி.வீரமணியும் அமர்ந்து வந்த பவனி, பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக்கூட்டம். அமைச்சர் எஸ் இராமச்சந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார். தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், கி.வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் விடுதலை ஆசிரியரும், கார் நிதி அமைப்பாளருமான கி.வீரமணி  அவர் கேட்டதோ ஒரு லட்சம், ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும்  மேல் மீதியில் 50 ஆயிரம் ரூபாய் பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது. பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச்சந்திரா. பட். ஜான்சன், ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. (ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார். ஒரு டேப்  ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் போர்த்தினார் முதல்வர் கலைஞர். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள்  எல்.ஜி. பாலகிருஷ்ணன் கம்பெனியார். விழாவில் கி.வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவுக்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன.

தந்தை பெரியார் அவர்களின் மறைவு
தந்தை பெரியார் அவர்கள் வேலுரில் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் 22-12-73 இரவு பெரியாருக்கு வலி மிகுந்து விட்டது. தூக்கமில்லாமல் அவதிப்பட்டார்.டாக்டர் பட்டும், டாக்டர் ஜான்சனும் அருகிலேயே இருந்து கவனித்தனர். பெரியார் நினைவிழந்த நிலையிலேயே காணப்பட்டார். பிராணவாயுக்குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அருகில் மணியம்மையார், கி.வீரமணி, சம்பந்தம், ஈ.வெ.கி. சம்பத் இருந்தனர்.94 ஆவது வயதில் 98 நாட்கள் உயிர் வாழ்ந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி 24-12-1973 காலை 7-22 மணிக்கு உலக மக்கள் இதயமெல்லாம் நிறைந்தார். டிரக் வண்டியில் சற்று உயர்த்திச் சாய்வாக அமைக்கப்பட்ட மேடையில்,பெரியார் படுத்திருக்க இருமருங்கிலும் மணியம்மையார், கி.வீரமணி, கலைஞர், நாவலர், என்.வி.நடராசன், ஈ.வெ.கி. சம்பத் அமர்ந்திருக்க, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும்  ஞரஉவரயடவைல  கடைப்பிடித்த பெரியாரின் இறுதி ஊர்வலம், 25-12-73 மாலை 3 மணிக்கு இராஜாஜி மண்டபத்திலிருந்து கிளம்பிச் சரியாக 4.55 மணிக்குப் பெரியார் திடலை அடைந்தது. டிரக் வண்டியின் முன்னால், மலர் தூவிய வண்ணம் தோழர்கள் சென்றனர்.
சரியாக 4.57 மணிக்குப் போலீசார் 36 குண்டுகள் வெடித்துத் துப்பாக்கியைத் தலைகீழாகப் பிடித்திட, போலீஸ் பேண்ட் சோக கீதம் இசைக்க, தேக்கு மரப்பெட்டியில் பெரியாரின் தேகம் வைக்கப்பட்டது. பெரியாரின் கண்ணாடியைக் கழற்றிக் கலைஞர் கி.வீரமணியிடம் தந்தார். தேக்குப் பெட்டியின் மூலைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சம்பத், காமராஜ்,கலைஞர்,கி.வீரமணி ஆகியோர் பிடித்துக் குழியில் இறக்கினர். காட்சி காணச் சகியாத கலைஞர் கோவென்று கதறியழக் காமராஜர் ஓடி வந்து, அணைத்துப் பிடித்து ஆறுதல் கூறினார். 27 ஆம் தேதி கவர்னர் கே.கே. ஷா, ராஜா சர் முத்தையாச் செட்டியார் ஆகியோர் பெரியார் திடலுக்கு வந்து மணியம்மையார், கி.வீரமணி ஆகியோரைக் கண்டு விசாரித்தனர். அமைச்சர் ராஜாராம் இருந்து வரவேற்றார். அடுத்த 30 ஆம் தேதி சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாசர் வந்து 15 நிமிட நேரம் தங்கியிருந்து சென்றார். அய்யா நினைவிடத்தைப் பார்த்தார்.

 
  | | | | |